திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. இவருடைய மனைவி சர்மிளா. இந்த தம்பதிக்கு ரம்ஜான் பாத்திமா என்கிற 5 வயது மகள் இருந்திருக்கிறாள். கடந்த 18ம் தேதி இந்த சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சிகிச்சைக்காக சிறுமியை உடுமலைபேட்டை அரசு மருத்துவமனைக்கு மன்சூர் அலியும் அவரது மனைவியும் அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையாமல் இருந்திருக்கிறது. இதை தொடர்ந்து மருத்துவர்கள் 19ம் தேதி சிறுமியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து பல்வேறு கட்ட சிகிச்சைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் முடிவில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

பொள்ளாச்சி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் காய்ச்சல் குறையாத காரணத்தால் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு வரப்பட்டாள். 

ஆம்புலன்சில் கோவைக்கு கொண்டு வரும்போது சிறுமிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்கு வந்ததும் உடனடியாக குழந்தைகள் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ரம்ஜான் பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தாள்.

சிறுமி மரணமடைந்த தகவல் அவளின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். இது பார்த்தவர்களை பரிதாபம் கொள்ளச் செய்தது. இதுவரையிலும் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரையும் தனி வார்டில் வைத்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 வயது சிறுமி பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.