பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தாகூர் பஸ்வான். இவரது மனைவி திட்டா தேவி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மோகம் குமார் என்கிற ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் தங்கி அந்த பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குழந்தை மோகம் குமாருக்கு மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக குழந்தையை அவரது பெற்றோர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. 

இந்த நிலையில் சம்பவத்தன்று மோகம் குமார் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை மோசமடைந்தது. இதை பார்த்து செய்வதறியாது திகைத்த அவரது பெற்றோர் உடனடியாக குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.அங்கு குழந்தையை தீவிரமாக பரிசோதித்த மருத்துவக்குழுவினர் மோகம் குமாருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதைதொடர்ந்து குழந்தையை சிறப்பு வார்டில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை மோகனம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்த அவர்கள் கதறி துடித்தனர்.

மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.