கேரள மாநிலம் பாலக்காடு அருகே இருக்கும் நல்லேப்பள்ளியை சேர்ந்தவர் விபின் தாஸ்(43). இவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அதற்காக ஒரு வாடகை காரில் நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது குடும்பத்தினர் மீரா(38), ரமேஷ்(50), ஆதிர்ஷா(12), நிரஞ்சன்(7), ரிசிகேஷ்(11), ஆதிரா(16) ஆகியோர் பயணம் செய்தனர். காரை பாலக்காட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கோவை பைபாஸ் சாலை வழியாக கார் வந்து கொண்டிருந்தது. செட்டிபாளையம் சோதனைச்சாவடி அருகே வந்த போது காருக்கு முன்னால் சென்ற ஒரு வாகனத்தை ஓட்டுநர் முந்த முயன்றிருக்கிறார். அப்போது அதே சாலையில் எதிரே டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது அந்த நேரத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற கார் எதிரே வந்த டேங்கர் லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்து கூச்சல் போட்டனர்.

எதிரே வந்த டேங்கர் லாரி கார் மீது மோதிய வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காருக்குள் இருந்து அவர்களை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அதில் ரமேஷ், ஆதிர்ஷா, ரிஷிகேஷ் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தனர்.

மற்றவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி உடனடியாக அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.