விஜயராகவன்(24 ) என்பவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிறுமிகளிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்து வந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் உக்கடம் பேருந்து நிலையத்தில் மூன்று சிறுமிகளுடன் சுற்றித் தெரிந்த விஜய ராகவனை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்த்துள்ளனர்.

இதையடுத்து சிலர் அந்த சிறுமிகளிடம் அவர்கள் யார்? எதற்காக இந்த இரவு நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள்? என்று விசாரித்து உள்ளனர். இதை விஜயராகவன் தடுத்தாக தெரிகிறது. இதனால் அங்கிருந்தவர்களுடன் அவர் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

உடனடியாக விஜயராகவன் தனது நண்பர்களான ரத்தனபுரியைச் சேர்ந்த பூபதி(19 ) மற்றும் குமார்(33 ) ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த அவர்கள் இருவரும் சிறுமிகளை ஒரு ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்று பூபதியின் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

மூன்று சிறுமிகள் நள்ளிரவு நேரத்தில் அழைத்து வரப்பட்டிருப்பதை அறிந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் வீட்டில்  அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர். சிறுமிகளிடம் விசாரணை செய்ததில் பணம் தருவதாக கூறி திருப்பூரில் இருந்து விஜயராகவன் தங்களை அழைத்து வந்ததாக கூறியுள்ளனர்.

மீட்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் 16 வயது தான் ஆகின்றது. அவர்களை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். பின்னர் அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கோவை வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து 3 வாலிபர்களையும் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.