தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளன.

இதனிடையே கோவையில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான்கு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் பெய்த கனமழையில் அங்கிருந்த பங்களா சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு ஒரே நேரத்தில் அனைவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் ராசாமணி, அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பங்களா சுற்றுச் சுவரின் எஞ்சிய பகுதியையும் இடிக்க உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும் என்றும், விபத்துக்கு காரணமான பங்களா உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.