தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. இன்று 57 வயது பெண் ஒருவர் கொரோனாவிற்கு பலியானதால் பலி எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்துவரும் நிலையில், கோவையில் 10 மாத குழந்தை கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பது தமிழக மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் மட்டுமல்லாமல் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பெண் மருத்துவர் மற்றும் அவரது 10 மாத குழந்தை உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்தனர். 

இந்நிலையில், 10 மாத குழந்தை, குழந்தையின் தாயான மருத்துவர், அந்த குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவர் மற்றும் கொரோனாவால் கோவையில் பாதிக்கப்பட்ட மாணவி என மொத்தம் 5 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தகவல் தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் செய்தியாக அமைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அது முற்றும் முன்னர் சிகிச்சையளித்தால் காப்பாற்றிவிடலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்ந்து நம்பிக்கையளித்துவரும் நிலையில், கோவையில் குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளனர்.