கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அதில் கோவையைச் சேர்ந்த பயணிகள் 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் பேருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கும் அரியப்பம்பாளையம் மூலம் கிணறு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி வேகமாக எதிரே வந்துள்ளது.

திடீரென்று எதிர்பாராதவிதமாக ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. உடனே பேருந்தில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து எழுந்தனர். அவர்கள் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்தனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுனர் உட்பட பயணிகள் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து நடந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் இருக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.