திமுக அரசின் தவறால் தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசு செய்த தவறுகளால் தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் (Ccwsss) கீழ் வழங்கப்படும் குடிநீரானது மாசுபட்டிருப்பதாகவும் உறை கிணறுகளுக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதியுறுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.
திராவிட மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடி
இயற்கையாகவே அசுத்தங்களை வடிகட்டி குடிநீரை சுத்திகரிக்கும் அமைப்பு கொண்ட உறை கிணறுகள், திறந்தவெளி மலம் கழித்தல், கழிவுகளை கொட்டுதல் மட்டுமன்றி ஒப்பந்ததாரர்களின் மெந்தனப்போக்கால் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தகவல், திராவிட மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.
திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்
ஆனால் குழாய்ப் போக்குவரத்து மூலம் குடிநீரில் உள்ள கழிவுகள் வடிகட்டப்படுகின்றன எனவும் ஆற்றிலிருந்து ஆற்றிலிருந்து நேரடியாகக் நேரடியாகக் குடிநீர் பெறப்படுவது தற்காலிகமானது தான் எனவும் வாய்க்கு வந்ததைக் கூறி தாங்கள் நிர்வாகத்தின் மீதுள்ள புகார்களை மூடி மறைக்க முயலும் திமுக அரசு, அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா?
பல்லாவரம் சம்பவத்தில் பாடம் கற்றுக்கொள்ளாத திமுக
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த சோகத்தையே தமிழகம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அத்தகைய துயர விபத்திலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக் கொள்ளாமல் அப்பாவி மக்களின் உயிரை இந்த ஆளும் அறிவாலய அரசு இப்படி அலட்சியப்படுத்துவது ஏன்? கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?
சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும்
உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை பிறருக்கு வகுப்பெடுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு குடிநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும் அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டியது ஆளும் அரசின் கடமை என்பதும் தெரியாதா? எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்'' என்றார்.
