மாம்ப‌ழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

MK Stalin's Letter To The Central Government Regarding Mango Farmers: தமிழ்நாட்டில் “மா” விளைச்சல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகளின் நலனைக் காத்திடும் வகையில், மாங்கனி விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய சந்தைத்தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme) செயல்படுத்தி விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்கிட உரிய திட்டத்தினை செயல்படுத்திடகோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'மா' விவசாயிகள் பாதிப்பு

அந்த கடிதத்தில் இந்த ஆண்டு அதிகமான “மா” உற்பத்தி மற்றும் சந்தையில் ஏற்பட்ட திடீர் மந்தநிலை காரணமாக தமிழ்நாட்டில் மாம்பழ விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து, மாம்பழம் உற்பத்தி செய்யும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னலைத் தீர்க்கும் வகையில் சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme under PM-AASHA) மாநிலத்தில் செயல்படுத்துமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு 7வது இடம்

”பழங்களின் அரசன்” என்று அழைக்கப்படும் மாங்கனி, தமிழ்நாட்டில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 9.49 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், அகில இந்திய அளவில்”மா” சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தி அடிப்படையில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் ”மா” இரகங்களில் பெங்களூரா இரகம் 80 சதவீதமும், அல்போன்சா இரகம் 50 சதவீதமும் மாம்பழக்கூழ் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

அபரிமிதமான மாம்பழ உற்பத்தி

இந்த ஆண்டு, சாதகமான காலநிலை காரணமாக அபரிமிதமான மாம்பழ உற்பத்தி ஏற்பட்டுள்ளது எனினும், முந்தைய ஆண்டுகளின் கையிருப்பு அதிகமாக இருப்பதால் தேவை-விநியோகத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. இது இறுதியில் விவசாயிகளுக்கு பெங்களூரா வகைக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை குறைந்த விலைக்கு வழிவகுத்தது.

விவசாயிகளின் துயரத்தைப் போக்க...

“மா” விவசாயிகளின் துயரத்தைப் போக்க, நடைமுறையில் உள்ள விற்பனை விலைக்கும் சந்தை தலையீட்டு விலைக்கும் (MIP) உள்ள வேறுபாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் சந்தை தலையீட்டுத் திட்டத்தின் (Market Intervention Scheme under PM-AASHA) கீழ் விலை வித்தியாசத் தொகையினை செலுத்தும் வழிமுறையை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.5,000

ஒரு ஹெக்டேருக்கு ரூ.50,553/- என்ற சராசரி உற்பத்திச் செலவு மற்றும் 6.51 மெட்ரிக் டன்/ஹெக்டேர் என்ற சராசரி உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டு, சந்தை தலையீட்டு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.7,766/‍ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை விலையை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.5,000/- எனக் கருத்தில் கொண்டு, ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,766/- பற்றாக்குறை செலுத்த முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே 50:50 விகிதத்தில் பகிர்ந்து கொள்ள ரூ.62.93 கோடி மொத்த தொகையாக முன்மொழியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

எனவே, 2.27 இலட்சம் மெட்ரிக் டன் பெங்களூரா மாம்பழங்களுக்கு நேரடிப்பலன் பரிமாற்றமாக, விலைப் பற்றாக்குறைக் கட்டணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், விற்பனையில் சிரமத்தைத் தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் சந்தை தலையீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு இக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய வேளாண்மை - உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.