செய்தியாளர் மீது தாக்குதல்.. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யகோரி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்!
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அ.செந்தில்குமார், என்பவர் மீது சிலர் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களை விரைந்து கைது செய்யக்கோரி CHENNAI PRESS CLUB கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கிய விவகாரமானது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது அனைவரும் அறிந்த விசயம்தான். தற்போது இது தொடர்பாக சில முக்கிய குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் சோதனைகளும், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
அதே போல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்டா நகர் சஹாரா எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்திலும் சோதனை நடப்பதாக வெளியான தகவலையடுத்து செய்தியின் உண்மைத்தன்மை அறிவதற்காக பிரபல தனியார் நியூஸ் ஒளிப்பதிவாளர் அ.செந்தில்குமார் இன்று காலை சென்ற போது, குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் கீழ் அமைந்துள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து திடீரென வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலரால் அங்குள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்.
மேலும், அவரது ஒளிப்பதிவு கருவியை பிடுங்கி அதில் உள்ளவற்றை அழிக்க சொல்லி மிரட்டப்பட்டும் இருக்கிறார். இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் அ.செந்தில்குமார் அவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய திமுகவைச் சேர்ந்த கலை மற்றும் சிலர் மீது புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்து பல மணி நேரமாகியும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கும் விதமாக CHENNAI PRESS CLUB, சார்பில்... உடனடியாக குற்றவாளிகள் மீது FIR பதிவு செய்து ஒளிப்பதிவார் செந்தில்குமார் மீது கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக... பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.