விஜய்க்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Jacto Geo Denies Meeting With TVK Vijay: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறார். இந்த விழா பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 13ம் தேதி விஜய்யை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், விஜய்யை சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விஜய்யை சந்திக்கவில்லை என ஜாக்டோ-ஜியோ மறுப்பு
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 13.06.2025 அன்று நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன் சந்தித்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பேசிய செய்தி என்பது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்து பேசியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு ஜாக்டோ-ஜியோ சார்பில் மறுப்பை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராட்டம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பு தமிழ்நாட்டில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடிவருகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரமைப்பாகும். அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகள் மீளப் பெறப்பட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது.
நல்ல முடிவுகள் வரும்
இன்றைக்கும் தமிழ்நாடு அரசிடம் ஜாக்டோ-ஜியோ சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகள் விளைவாகவும் அரசிடமிருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு பணிவரன்முறைக்கு சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம். மேலும், பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025-க்குள் பெறப்படும் என உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசிடமிருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம்.
விஜய்க்கும் ஜாக்டோ-ஜியோவுக்கும் சம்பந்தம் இல்லை
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு அரசு ஊழியர். ஆசிரியர், அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
செய்தியை திரும்ப பெற வேண்டும்
எனவே, ஜாக்டோஜியோ சார்பாக மேற்கண்ட நடிகர் மற்றும் சங்கத்தலைவர் அவர்களை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது. அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, பத்திரிகைகளில் இச்செய்தியை திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
