கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது. விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி பெரும் விபத்தை தவிர்த்தார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில் மற்ற 241 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாகுவதும் மட்டுமல்லாமல் எந்திர கோளாறு ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. இதனால் விமானத்தில் செல்லும் பயணிகள் ஒரு வித பீதியுடனே செல்கின்றனர்.

இந்நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் வந்தது. சென்னையில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது 4வது இன்ஜினில் தீ விபத்து புகை வெளியேறியது கண்டு விமானி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக இழுவை வாகனங்கள் மூலம் விமான நிறுத்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.