இனி ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! வேடனுக்கு சுத்துப்போட்ட போலீஸ்!
ராப் பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

ராப் பாடகர் வேடன்
பிரபல மலையாள சினிமாவில் ராப் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வேடன். அவர் சினிமா தவிர்த்து அரசியல் கருத்துகள் மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டங்கள் மற்றும் எழுச்சியையும் பாடி வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்குமாக கொண்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதன்முறையாக அவர் மீது பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து உண்மையை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். கடத்த ஏப்ரல் மாதம் கஞ்சா வைத்திருந்த புகாரில் கைது செய்யப்பட்ட வேடன் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அது மட்டுமல்லாது சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக வனத்துறை அதிகாரிகளாலும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
பாலியல் புகார்
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் வசமாக சிக்கியுள்ளார். அதாவது கடந்த மாதம் வேடன் மீது பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வேடனின் பாடல்களுக்கு ரசிகையாக இருந்த அந்த பெண் வேடனை சந்தித்துப் பேசி பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் இருவரும் காதலாக மாறியுள்ளது. பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டது மட்டுமல்லாமல் பணம் பெற்று தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த பெண் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
லுக் அவுட் நோட்டீஸ்
இதனையடுத்து திரிக்கரக்கா போலீஸார் வேடன் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளிநாடுகளுக்கு தப்பித்து சென்று விடாமல் இருக்க வேடனுக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
மஞ்சும்மல் பாய்ஸ்
கடந்த ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் குத்தந்திரம் பாடலை எழுதி பாடியவர் ராப் பாடகர் வேடன். ஹிரந்தாஸ் முரளி என்ற வேடன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக கடந்த 2020ம் ஆண்டு வெளியான வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் என்ற ஆல்பம் பாடல் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். மேலும் தமிழில் பிரபல இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.