தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரம் உஷார்! 9 மாவட்டங்களில் பொளந்து கட்டப்போகும் மழை!
தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை குறைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் வடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.