பிரிட்டன் ஆய்வகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசு இனியாவது கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Face design of Tamilans ​​Who Lived In Keezhadi: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி நாகரீகம் கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய நிலையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் ஆய்வறிக்கை சர்ப்பித்தார். ஆனால் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய தொல்லியல் துறை இந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது.

கீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு

இதற்கு தமிழ்நாட்டில் கண்டங்கள் எழுந்த நிலையில், ''கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அதனை அங்கீகரிக்க முடியும்'' என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார். தமிழர்களின் வரலாற்றை புறம்தள்ளும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

கீழடி தமிழர்களின் முகங்கள் வடிவமைப்பு

இந்நிலையில், பிரிட்டன் ஆய்வகத்தில் கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொந்தகையில் 800மீ அகழாய்வில் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இப்போது 3D முறையில் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்த மண்டை ஓடுகளை DNA பகுப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி அறிய ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை ஆகும். கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இனியாவது மத்திய அரசு ஒத்துக் கொள்ளுமா?

கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு ஆதாரம் கேட்ட நிலையில், இப்போது கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் ஆதாரங்கள் உலகளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இனியாவது மத்திய அரசு கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுமா? என்பதே அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் கேள்வியாக உள்ளது.

 இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், ''சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை இப்போது #கீழடியில் உள்ள கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்'' என்று கூறியுள்ளார்.

8 கோடி தமிழர்களின் கேள்வி

மத்திய அரசு கேட்ட சான்றுகள் உள்ள நிலையில், இனியாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம். 

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி'' என்று தெரிவித்துள்ளார்.