கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 1300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவருகின்றன. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவாத நிலையில், அதைத்தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், டெல்லி மேற்கு நிஜாமுதீனில் தப்ளிக் ஜமாத்தில் கலந்துகொண்டவர்களால்  இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்துவருகிறது. 

மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் முச்சதமடித்துவிட்ட நிலையில், கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடும் கொரோனா பாதிப்பில் இரட்டை சதமடித்துவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

டெல்லி தப்ளிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 1103 பேர் தாமாக முன்வந்து பரிசோதித்து கொண்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்த அப்டேட் செய்த பீலா ராஜேஷ், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 1103 பேர் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் எடுக்கப்பட்ட டெஸ்ட்டில் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. 

இந்த 234 பேரில் 190 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். ஏற்கனவே டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.