4 வாரங்களில் சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai HC Orders issuance Of Passport To Seeman: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியல் களத்தில் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை கையில் எடுத்து அரசியலில் ஈடுபடும் இவர் மாநில, மத்திய அரசின் தவறுகளை தொடர்ந்து வெளிப்படையாக சுட்டிக்காட்டி வருகிறார். பல்வேறு விவகாரங்களில் இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு

இந்நிலையில், சீமான் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது அவரது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகவும், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி அவரது விண்ணப்பம் கடந்த 12 வருடங்களாக நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி பாஸ்போர்ட் தர மறுப்பு

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவில், ''"எனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். அப்போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் எனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நீதிபதி அதிரடி உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்யடரும் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமானுக்கு 4 வாரங்களுக்குள் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிடியாக உத்தரவிட்டார். இதன்மூலம் மிக நீண்ட காலத்துக்கு பிறகு சீமானுக்கு பாஸ்போர்ட் கையில் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.