சென்னையில் கால் சென்டர் ஊழியரிடம் செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். காதலி வீட்டை விட்டு துரத்தியதால் பணத் தேவைக்காக திருடியதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் கைது.

சென்னை ஜமீன் பல்லாவரம் எம்.ஜி ஆர் தெருவை சேர்ந்தவர் கலைவாணி (50). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவனை இழந்து வறுமையில் இருந்த போது முடிச்சூரில் உள்ள பிரபல தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் கலைவாணி இருசக்கர வாகனத்தில் தனது வீட்டின் அருகேயுள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவன், கண்ணிமைக்கும் நேரத்தில் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ளகுற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தப்பிச் சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையன் வந்து சென்ற பல்சர் பைக்கின் நம்பர் தெளிவாக தெரிந்தது. அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கிளச்சிரா பட்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (23) என்பது தெரிய வந்தது. பல்லாவரத்தில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விக்னேஷ் ஆரம்பத்தில் திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை பார்த்து வந்தான். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதனால் அவரை திருமணம் செய்யும் நோக்கத் தோடு, கடந்த ஆறு மாதத்திற்கு முன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, ஜமீன் பல்லாவரம் சுபம் நகர் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அவரது காதலி குரோம்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ஊழியராக பணிக்கு சேர்ந்த நிலையில், விக்னேஷ் மட்டும் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை காதலி பலமுறை கண்டித்தும் அவன் திருந்தாததால், இனிமேல் நீ வீட்டிற்கு வரக்கூடாது, வெளியே செல் என்று கோபமாக கூறி அவனை காதலி வீட்டை விட்டு துரத்தினார். இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த விக்னேஷ், சம்பவம் நடந்த அன்று கால் சென்டர் ஊழியர் கலைவாணியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப் பட்டது. அவன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.