நாமக்கல்லில் கடன் தொல்லையால் மனமுடைந்த தந்தை, தனது 3 மகள்களையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் கோவிந்தராஜ்(36). இவரது மனைவி பாரதி (25). இந்த தம்பதிக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடன் வாங்கி வீட்டை காட்டியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடனை கொடுத்தவர்களும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

கழுத்தை நெரித்த கடன்

இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1½ வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த திடீரென எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ்பால் போட்டார்.

3 மகள் கொலை

பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக துடிதுடிக்க வெட்டியுள்ளார். குழந்தைகள் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த தாய் பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் வெளியில் வர முடியவில்லை. இதனையடுத்து 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

பாரதியின் அலறும் குரலை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் 3 குழந்தைகள் மற்றும் கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.