அந்த மூன்று மணி நேரம்..! கண் முன்னே மரண பயத்தை காட்டிய கனமழை.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வௌியில் செல்வதற்கு அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, கோலியனூர், வளவனூர், காணை, முகையூர், முட்டத்தூர், நேமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது கொட்டி தீர்த்தது. கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடின தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்ததால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மழையின் காராணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.