குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையிலான போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க போக்சோ சட்டம் கடந்த 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

ஆனாலும், இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் அதிகரித்து வந்தது. அதனால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை கிடைக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

* குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனை அதிகரிக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.

* குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆபாச படங்களை ஒழிப்பதற்கான விதிமுறைகள் வகுக்க இந்த சட்ட திருத்தம் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

* போக்சோ சட்ட திருத்த மசோதா படி, 16 வயதுக்கு குறைவான குழந்தைகளை பலாத்காரம் செய்தால், 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும். இது அபராதத்துடன் ஆயுள் தண்டனையாகவோ அல்லது மரண தண்டனையாகவோ நீட்டிக்கப்படலாம்.

* ஆபாசப் படம் தயாரிக்க குழந்தைகளை பயன்படுத்தினால், அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். 2வது முறை இந்த குற்றத்தில் ஈடுபட்டால், அபராதத்துடன் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.