உலக பேட்மின்டன் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவை வீழ்த்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனைக்கு இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சுவிட்சர்லாந்தின் பாசில் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின்நசோமி ஒகுஹாராவை எதிர்த்து பி.வி.சிந்து களம் இறங்கினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.  

இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்ற வீராங்கனை என்ற சாதனையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளளனர்.

 

அம்மாவுக்கு பிறந்த நாள் பரிசு!

உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற தங்கப் பதக்கத்தை தனது அம்மாவின் பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிப்பதாக சிந்து அறிவித்துள்ளார். சாதனை வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தது. மூன்றாவது முயற்சியில் வெற்றியை வசப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது தாய்க்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். பயிற்சியாளர்கள் கோபிசந்த், கிம் ஜி ஹியுன் இருவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்’ என்றார்.