இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி செய்யத்தவறிய ஒரு விஷயம் என்னவென்று அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அந்த அணி சிறப்பாக ஆடி, 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் மோசமான தோல்வியை பரிசளித்தது. 

அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை கடைசி ஓவர்களில் முழுவதுமாக கட்டுப்படுத்தி, 158 ரன்களில் சுருட்டியது. 159 ரன்கள் என்ற இலக்கை எளிதாக விரட்டி வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள், இரண்டாவது போட்டியில் அபாரமாக பந்துவீசி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். 

இரண்டாவது போட்டி முடிந்ததும் பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்த ஆடுகளம்(ஆக்லாந்து ஈடன் பார்க்) பேட்டிங் ஆடுவதற்கு சற்று கடினமாக இருந்தது. எனினும் கடைசி ஓவர்களில் நன்றாக ஆடி கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் இந்த ஆடுகளத்தில் 180-200 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். 180 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் பட்சத்தில், அந்த ஸ்கோர் எளிதாக எட்டக்கூடியதல்ல என்று தெரிவித்தார்.