காமன்வெல்த் விளையாட்டில் அறிமுக போட்டியிலேயே இந்தியாவை சேர்ந்த 14 வயது இளம் வீராங்கனை அனஹாத் சிங் அபார வெற்றி பெற்று அசத்தினார். 14 வயதில் பட்டைய கிளப்பும் இந்த அனஹாத் சிங் யார் என்று பார்ப்போம். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று (ஜூலை 29) முதல் நடந்துவருகிறது. முதல் நாளில் டேபிள் டென்னிஸ், பாக்ஸிங், நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றனர்.

ஸ்குவாஷ் போட்டியில் களமிறங்கிய வெறும் 14 வயதே ஆன இந்தியாவின் இளம் வீராங்னை அனஹாத் சிங், அறிமுக போட்டியிலேயே எதிரணி வீராங்கனையான ஜடா ரோஸ் என்பவரை 11-5, 11-2, 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க - காமன்வெல்த் நீச்சல் போட்டி: இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனஹாத் சிங், ஆட்டத்தின் எந்த சூழலிலும் ஜடா ரோஸை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. ரோஸும் எவ்வளவோ போராடினார். ஆனால் இளம் அனஹாத் சிங்கின் அருகில் கூட ரோஸால் வரமுடியவில்லை. 

14 வயதில் அறிமுக போட்டியிலேயே அசத்திய இந்த அனஹாத் சிங் யார் என்று பார்ப்போம்.

அனஹாத் சிங் டெல்லியை சேர்ந்தவர். 14 வயதான இவர் 9ம் வகுப்பு படித்துவருகிறார். காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ள சென்றுள்ள இந்திய அணியில் இவர் தான் இளம் வயது வீராங்கனை. தேசியளவில் நடந்த தேர்ச்சி போட்டியில் அபாரமாக விளையாடி காமன்வெல்த்துக்கு தேர்வானார். இவர் இந்த இளம் வயதிலேயே ஏற்கனவே 50 டைட்டில்களை வென்றுள்ளார். யுஎஸ் ஜூனியர் ஓபன், பிரிட்டிஷ், ஜெர்மன், டட்ச் ஜூனியர் ஓபன் போட்டிகள், ஏசியன் சாம்பியன்ஷிப் ஆகிய டைட்டில்களை வென்றுள்ளார்.

இதையும் படிங்க - Commonwealth Games 2022: 2ம் நாளில் (ஜூலை 30) இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டிகள்

பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் (2019) மற்றும் யுஎஸ் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் (2021) ஆகிய 2 டைட்டில்களையும் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர் அனஹாத் சிங். இந்தியாவின் ஸ்குவாஷ் அண்டர் 15 தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனை அனஹாத் சிங்.