2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிப் பெற்றது. 

தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தியதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிப் பெற்றது. 

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் எடுத்தது. 

அடுத்து ஸ்காட்லாந்து ஆடியபோது மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லீவிஸ் முறையில் அந்த அணிக்கு 35.2 ஓவர்களில் 131 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்து வீழ்ந்தது. 

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீசத் தீர்மானிக்க, பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் எவின் லீவிஸ் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்தார். 

ஸ்காட்லாந்து தரப்பில் சஃபியான் ஷரிஃப், பிராட் வீல் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் ஆடிய ஸ்காட்லாந்தில் ரிச்சி பெரிங்டன் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் எடுத்தார். 

மேற்கிந்தியத் தீவுகளில் ஆஷ்லே நர்ஸ், கெமர் ரோச் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தத் தோல்வியின் மூலமாக தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை ஸ்காட்லாந்து இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.