- Home
- Sports
- Sports Cricket
- இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மெதுவாக பந்துவீசியதற்காக கேப்டன் கே.எல்.ராகுல், இந்திய வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்திய அணிக்கு அபராதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் நடுவரான ரிச்சி ரிச்சர்ட்சன் இந்த அபராதத்தை விதித்தார்.
கேப்டன், வீரர்களுக்கும் அபராதம்
நேரக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்ட பிறகு, கே.எல். ராகுல் தலைமையிலான அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு ஓவர்கள் குறைவாக பந்துவீசியது கண்டறியப்பட்டது.
ஐசிசி-யின் வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கான நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் படி, குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களுக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
ராகுல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, முன்மொழியப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை. கள நடுவர்களான ராட் டக்கர் மற்றும் ரோஹன் பண்டிட், மூன்றாவது நடுவர் சாம் நோகாஜ்ஸ்கி மற்றும் நான்காவது நடுவர் ஜெயராமன் மதனகோபால் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டைக் சுமத்தினர்.
2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. விராட் கோலி (102) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (105) ஆகியோரின் சூப்பர் சதத்தால் இந்திய அணி 358/5 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காஅணியில் எய்டன் மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து அபாரமாக ஆட, அந்த அணி 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் அபார வெறி பெற்றது.
3வது போட்டியில் பதிலடி கொடுத்த இந்தியா
முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் வென்றிருந்த இந்திய அணி 2வது போட்டியில் அடைந்த தோல்விக்கு 3வது மற்றும் கடைசி போட்டியில் பதிலடி கொடுத்து தொடரையும் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்பு விளையாடிய இந்திய அணி 40 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் (121 பந்தில் 116 ரன்கள்) சூப்பர் சதம் விளாசினார். ரோகித் சர்மா (75 ரன்), விராட் கோலி (65 ரன்) அதிரடி அரை சதம் அடித்தனர்.

