இந்தியாவை விளையாட்டுத் துறையில் சிறந்த நாடாக உருவாக்குவதில் ஐஒஏவுடன் இணைந்து செயலாற்றுவதில் ஆர்வத்துடன் உள்ளோம் என்று விஜய் கோயல் தெரிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஒஏ) வாழ்நாள் தலைவர்களாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, அபய் சிங் செளதாலா ஆகியோரை நியமித்ததை அந்தச் சங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இதையடுத்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் இரத்து செய்யப்பட்ட ஐஒஏவின் அங்கீகாரம், மீண்டும் அந்தச் சங்கத்துக்கு வழங்கப்படுவதாகத் தெரிகிறது.

முன்னதாக, கல்மாடி, செளதாலா ஆகியோரது நியமனம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அந்த நோட்டீஸுக்கு அளித்துள்ள பதிலில் ஐஒஏ தலைவர் என்.ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது:

“இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் சென்னையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஐஒஏவுக்கு 2 வாழ்நாள் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தை உறுப்பினர் ஒருவர் எழுப்பினார்.

எனினும், விதிகளின் படி அதுதொடர்பாக எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டத்தின்போது அந்தப் பதவிக்கான பரிந்துரைகளை உறுப்பினர்கள் முன்வைக்கலாம்.

அரசமைப்பு விதிகளுக்கு உள்பட்டதாக இல்லாத பட்சத்தில், அந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவோ, அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.

அதன்படி, விதிகளுக்கு உள்படாத வகையிலான அந்த பரிந்துரையினால் குறிப்பிட்ட தனிநபர்களுக்கும், ஐஒஏ உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட இடையூறுகளுக்காக வருந்துகிறோம்” என்று அந்த பதிலில் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

ஐஒஏவின் முடிவு குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதா:

சுரேஷ் கல்மாடி, அபய் சிங் செளதாலா ஆகியோரை ஐஒஏவின் வாழ்நாள் தலைவர்களாக நியமித்த நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் இரத்து செய்துள்ளதாக ஊடகங்களின் மூலம் அறிந்தேன். ஐஒஏவின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்னதாக மேற்கொண்ட அவசர முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பதன் மூலம், ஐஒஏ தனது விதிகளுக்கு இணங்கிச் செயல்பட்டுள்ளது.

இந்தியாவை விளையாட்டுத் துறையில் சிறந்த நாடாக உருவாக்குவதில் ஐஒஏவுடன் இணைந்து செயலாற்றுவதில் ஆர்வத்துடன் உள்ளோம்” என்று விஜய் கோயல் அதில் கூறியுள்ளார்.