இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து ராகுல் விலக்கப்பட்டது தவறான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அதன் முன்னோட்டமாக கருதி, தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. எனினும் 1-2 என தொடரை இழந்தது இந்திய அணி. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை இந்த தொடரில் எதிரொலித்தது. டாப் ஆர்டர்கள் சோபிக்காத ஆட்டங்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடு ஓவர்களில் சிறப்பாக ஆடி அணியை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். ரோஹித், தவான் ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக அதிரடியாக ஆடிவிடுகின்றனர். மூன்றாவது இடத்தில் கோலி இறங்குவார். 

4 மற்றும் 5வது இடங்களுக்கான பிரச்னை நீடித்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சரியாக இருப்பார் என சேவாக், காம்பீர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத தினேஷ் கார்த்திக்கிற்கு மூன்றாவது போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் நீக்கப்பட்டுவிட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண், காயம் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவாவது ராகுல் நீக்கப்பட்டால் கண்டிப்பாக அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

ஏனெனில் ராகுலுக்கு இவ்வாறு நடப்பது இது முதன்முறையல்ல. ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குவது சரியல்ல. அதற்கு முந்தைய போட்டிகளில் நன்றாகத்தானே ஆடியுள்ளார். மிகச்சிறந்த வீரர் என்பது தெரிந்தும் அவரை இவ்வாறு நடத்துவது சரியல்ல. அவரை சிறப்பாக ஆடவைக்க வேண்டும். ஒரு இளம் வீரரை இப்படி நடத்தக்கூடாது என லட்சுமண் அதிருப்தி தெரிவித்துள்ளார்.