vinod rai opinion about kohli using captaincy power

இந்திய அணி கேப்டன் கோலி, அதிகாரத்தை அளவுகடந்து பயன்படுத்துவதாக நினைக்கவில்லை என பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியபிறகு, கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனியின் அணுகுமுறையிலிருந்து கோலியின் அணுகுமுறை முற்றிலும் முரணானது. தோனி எந்த சூழலிலும் கூலாக இருப்பவர். கோலி சற்று ஆக்ரோஷமானவர்.

ஆக்ரோஷத்தை கடந்து, அணியை கடந்து அணி நிர்வாகத்திலும் கோலியின் அதிகார ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் கோலியை கட்டுப்படுத்த கூடிய ஒரு பயிற்சியாளர் தேவை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. கோலியின் கேப்டன்சியின் மீதான விமர்சனங்கள் எழுந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில், கேப்டன்சி அதிகாரத்தை கோலி பயன்படுத்துவது குறித்து பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள வினோத் ராய், எந்தவொரு கேப்டனாக இருந்தாலும் அணியில் அவரது தாக்கும் குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவில் கேப்டன் தனிப்பட்ட அளவில் செயல்பட நான் ஆதரவாகத்தான் இருப்பேன். 

விராட் கோலி கேப்டன் பதவியை சந்தோசமாக அனுபவிப்பதற்காக, தனது பதவியை அளவு கடந்து பயன்படுத்தியதாக எந்தவொரு வீரரும் புகார் கூறியது இல்லை. என்னுடைய தனிப்பட்ட முறையில், விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் சரியாக இருக்கிறது. எந்தவொரு விஷயத்திற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. மேலும் அணி நிர்வாகம், தேர்வாளர்கள் யாராக இருந்தாலும் அவர் பற்றி எந்தவொரு புகாரும் அளித்தது கிடையாது என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

கோலியின் கேப்டன்சி மற்றும் ஆதிக்கம் குறித்த விமர்சனங்கள் அண்மைக்காலமாக பரவலாக எழுந்த நிலையில், வினோத் ராயின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.