நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என இழந்தது. கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, போராடி தோல்வியை தழுவியதால் தொடரை இழந்தது. 

இந்த தொடரில் 2 போட்டிகளில் மூன்றாவது வரிசையில் இறங்க கிடைத்த வாய்ப்பை ஓரளவிற்கு நன்றாகவே பயன்படுத்தி கொண்டார் விஜய் சங்கர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஆடிய விஜய் சங்கர், பெரியளவில் மிரட்டலாக ஆடவில்லை என்றாலும் நன்றாகவே ஆடினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. 

விராட் கோலி என்ற ஜாம்பவானின் பேட்டிங் வரிசையான மூன்றாம் வரிசையில் விஜய் சங்கர் களமிறக்கிவிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை வீணடித்துவிடாமல் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினாலும் அணியை வெற்றி பெற செய்யுமளவிற்கான இன்னிங்ஸை ஆடவில்லை. அவரது இன்னிங்ஸால் அணி பெற்றிருந்தால் அவரது லெவல் வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடருக்கு பிறகு மேம்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராகவே விஜய் சங்கர் நாடு திரும்புகிறார் என்பது நல்ல விஷயம். 

நியூசிலாந்து தொடருக்கு பின்னர் பேசிய விஜய் சங்கர், என்னை மூன்றாம் வரிசையில் இறங்க சொன்னது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இது மிகப்பெரிய விஷயம். சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்திய அணிக்காக ஆடும்போது எதை செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.