யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் எவ்வளவு பரிசுத்தொகை என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

US Open 2025 Prize Money: 2025ம் ஆண்டிற்கான யு.எஸ். ஓபன் (US Open) டென்னிஸ் போட்டித் தொடர் நியூயார்க் நகரில் உள்ள USTA பில்லி ஜீன் கிங் நேஷனல் டென்னிஸ் சென்டரில் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன்களான ஜானிக் சின்னர் மற்றும் அர்யனா சபலென்கா ஆகியோர் தங்கள் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக உள்ளனர்.

யு.எஸ் ஓபன் 2025

இவர்களுக்கு கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஸ்வெரெவ், இகா ஸ்வியாடெக்,கோகோ காஃப், வீனஸ் வில்லியம்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் கடும் சவால் அளிக்க காத்திருக்கின்றனர். யு.எஸ். ஓபன் 2025 தொடருக்கான பரிசுத்தொகை டென்னிஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது யு.எஸ் ஓப்பனில் இந்த ஆண்டு மொத்தப் பரிசுத் தொகை 90 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.747 கோடி) உள்ளது.

யு.எஸ் ஓபன் பரிசுத்தொகை

இது கடந்த ஆண்டின் 75 மில்லியன் டாலர் தொகையை விட 20% அதிகம். இது டென்னிஸ் உலகில் இதுவரை வழங்கப்பட்ட தொகைகளில் மிக உயர்ந்ததாகும். ஒற்றையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்கள் தலா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக பெறுவார்கள். இது கடந்த ஆண்டை விட 39% அதிகம் ஆகும். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

மற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை விட‌ அதிகம்

இதேபோல் இறுதிப் போட்டிக்கு வருபவர்களுக்கு 2.5 மில்லியன் டாலர்களும், அரையிறுதிக்கு வருபவர்களுக்கு 1.26 மில்லியன் டாலர்களும், கால் இறுதிக்கு வருபவர்களுக்கு: 6,60,000 டாலர்களும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. யு.எஸ். ஓபன் போட்டி ஒற்றையர் வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகையிலும், மொத்தப் பரிசுத் தொகையிலும் மற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை விட மிக முன்னிலையில் உள்ளது.

விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபனுக்கு எவ்வளவு பரிசு?

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மொத்த பரிசுத் தொகை 66.5 மில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.551 கோடி) உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் மொத்த பரிசுத் தொகை 86.5 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.717 கோடி) ஆகவும், பிரெஞ்சு ஓபன் மொத்த பரிசுத் தொகை 57.5 மில்லியன் டாலர்களாகவும் (சுமார் ரூ.476 கோடி) உள்ளது குறிப்பிடத்தக்கது.