விம்பிள்டன் டென்னிஸ் 2025 தொடரில் தோல்வி அடைந்து வெளியேறிய ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தான் வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Germany's Alexander Zverev's Shock Defeat At Wimbledon 2025: டென்னிஸ் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிக உயர்ந்த அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜானிக் சினெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தோல்வி
இதற்கிடையே உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். அதாவது பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்கனெச்சியை எதிர்கொண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (3), 6-7 (8), 6-3, 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
மனரீதியாக போராடி வருகிறேன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தோல்வி அலெக்சாண்டர் ஸ்வெரேவ்க்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரக்தியுடன் பேசியுள்ள அவர், ''சில சமயங்களில் நான் மைதானத்தில் மிகவும் தனிமையாக உணர்கிறேன். மனரீதியாக நான் போராடி வருகிறேன்'' என்று கூறியுள்ளார். இப்போதைக்கு நான் வாழ்க்கையில் மிகவும் தனிமையாக உணர்கிறேன், இது ஒரு நல்ல உணர்வு இல்லை என்று தெரிவித்துள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இதில் இருந்து மீண்டு வெளிவர வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே சிக்கிக் கொள்கிறேன் என்றார்.
மகிழ்ச்சி இல்லை
தொடர்ந்து பேசிய அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ''"நான் இதற்கு முன் இவ்வளவு வெறுமையாக உணர்ந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சி இல்லை. டென்னிஸ் மட்டுமின்றி, இதற்கு வெளியேயும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. சமீபத்தில் ஸ்டட்கார்ட் மற்றும் ஹால்லே போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றபோதும் கூட நான் முன்பு அனுபவித்த மகிழ்ச்சியோ, உற்சாகமோ, தொடர்ச்சியாக செயல்படுவதற்கான உந்துதலோ எனக்கு இப்போது இல்லை'' என்று தெரிவித்தார்.
மனநல ஆலோசனை தேவை
தோல்வி மற்றும் மன விரக்தியால் துவண்டுள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஒருவேளை என் வாழ்க்கையில் முதல் முறையாக எனக்கு மனநல ஆலோசனை கூட தேவைப்படலாம் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார். 2019 விம்பிள்டன் தொடருக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றில் ஸ்வெரேவ் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னெரிடம் தோல்வியை தழுவினார்.
ரசிகர்கள் ஆறுதல்
அதன்பிறகு சரியான பார்மின்றி தடுமாறும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இப்போது முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளார். மிகவும் விரக்தியுடன் பேசிய அலெக்சாண்டர் ஸ்வெரேவ்க்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ''விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். மீண்டும் வலிமையுடன் திரும்பி வாருங்கள்'' என்று கூறி வருகின்றனர்.


