முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை கேஎல் ராகுல் உள்நோக்கம் இல்லாமல் உதாசினப்படுத்தியது, அவரை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்துள்ளது. புஜாராவும் ரஹானேவும் களத்தில் நிற்கின்றனர். 

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ராகுலும் முரளி விஜயும் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 18வது ஓவரை தனது முதல் ஓவராக வீசினார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நாதன் லயன். அந்த ஓவரின் முதல் பந்தை ராகுல் தடுத்து ஆட பந்து அவரது காலுக்கு கீழே விழுந்தது. அதை எடுக்க விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் வந்தார். அதை கவனிக்காமல் அவர்களுக்கு உதவும் விதமாக பந்தை எடுத்து பவுலரிடம் தூக்கி வீசினார் ராகுல். ஆனால் ராகுல் பந்தை தன்னிடம் கொடுப்பார் என நினைத்த டிம் பெய்ன் கடும் ஏமாற்றமடைந்தார். பேட்ஸ்மேன் பந்தை எடுத்தது தொடர்பான அதிருப்தியை அப்போதே வெளிப்படுத்தினார் டிம் பெய்ன்.