உலான்பாதர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சோனியா, லோவ்லினா போர்கோஹெய்ன், மன்தீப் ஜங்ரா உள்ளிட்டோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
 
உலான்பாதர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி மங்கோலியாவில் நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான 57 கிலோ பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சோனியா, சீனாவின் டியான்டியான் ஜாவை வீழ்த்தினார். சோனியா இறுதிச்சுற்றில் மங்கோலியாவின் துமுர்குயாக் போலோர்டுல்லுடன் மோதினார். 

அதேபோன்று, 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன், மங்கோலியாவின் எங்பாதர் எர்டெனெடுயாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  இறுதிச்சுற்றில் சீன தைபேவின் நியென் சென்சென்னை எதிர்கொள்கிறார். 

இதேபோல ஆடவருக்கான வெல்டர்வெயிட் அரையிறுதியில் மன்தீப் ஜங்ரா, மங்கோலியாவின் ஆட்கான் எர்டென்னை வீழ்த்தினார். இறுதிச்சுற்றில் அவர் அதே நாட்டைச் சேர்ந்த சென்ட் அயுஷ் ஆட்கானை எதிர்கொள்கிறார். 

ஆடவருக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிவ தாபா, மங்கோலியாவின் பட்டுமுர் மிஷீல்டிடம் வீழ்ந்து வெண்கலம் வென்றார். அவரோடு வாம்லிம்புயா 75 கிலோ எடைப் பிரிவிலும், ஆஷிஷ் 64 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கலம் வென்றனர்.