The seriousness of the goalie in the field encourages the cadres - former Captain
கோலி களத்தில் ஆடும்போது காட்டும் தீவிரமானது அணியின் சகவீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியது: "தற்போது இருக்கும் இந்திய அணியானது, ஒரு தொடரில் வெற்றி பெறத் தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்க இருக்கும் பேட்ஸ்மேன்கள் சுமார் 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். சிறப்பாகச் செயல்படக் கூடிய ஆல்ரௌண்டரான ஹார்திக் பாண்டியா அணியில் உள்ளார். திறமிக்க சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் இருக்கின்றனர்.
எனவே, தென் ஆப்பிரிக்காவில் சற்று அதிர்ஷ்டமும், சரியான ஆடுகளமும் அமையும் பட்சத்தில் தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என நம்புகிறேன்.
சில வேளைகளில், போட்டிகள் அட்டவணையின் அடிப்படையில் அணியின் வீரர்களுக்கு நெருக்கடி இருக்கலாம். அந்த வகையில் வீரர்களுக்கான பணிச்சுமை என்பது அனைத்து அணிக்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.
அவர்களுக்கான வேலைப் பளுவை குறைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் அதைச் செய்யும் பட்சத்தில் அவர்களது செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும்.
கோலியைப் பொருத்த வரையில், களத்தில் ஆடும்போது அவர் காட்டும் தீவிரமானது அணியின் சகவீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
