2018-19-ஆம் ஆண்டு உள்ளூர் சீஸனை விஜய் தேசிய ஒருநாள் சாம்பியன் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை ஆட்டங்களுடன் தொடங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொழில்நுட்பக் குழு முடிவு எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொழில்நுட்பக் குழு கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. 

இதுகுறித்து அக்குழு தெரிவித்தது: 

"2018-19-ஆம் ஆண்டு உள்ளூர் சீஸனை விஜய் தேசிய ஒருநாள் சாம்பியன் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை ஆட்டங்களுடன் தொடங்க வேண்டும். 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். 

மும்பையில் நடைபெற்ற அணி கேப்டன்கள் - பயிற்சியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரும்பாலானோர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. தற்போது 4 பிரிவுகளில் இருந்து 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன.

நாக் ஔட் ஆட்டங்கள் காலிறுதிக்கு முன்னரே தொடங்க வேண்டும் என கேப்டன்கள் கோரிக்கை வைத்ததால் கூடுதலாக 8 ஆட்டங்கள் இடம்பெறும். 16 அணிகளுக்கும் கூடுதலாக ஒரு ஆட்டம் நடைபெறும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மேற்கு இந்திய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால், விஜய் ஹசாரே போட்டியுடன் உள்ளூர் சீஸனை தொடங்க வேண்டும். பின்னர் ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் நடைபெறும். அதன் பின்னர் தேசிய டி 20 போட்டிகள் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டி நடைபெறும். இதன் மூலம் ஐபிஎல் அணிகள் திறமையான வீரர்களை கண்டறிய முடியும்" என்று தெரிவித்திருந்தது.