ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச் மற்றும் ஷார்ட் களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ஆரோன் ஃபின்ச்சை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஒரு ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி.

மீண்டும் புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டன. மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் அடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அந்த கேட்ச்சை ரிஷப் பண்ட் தவறவிட்டார். இதையடுத்து நான்காவது பந்தை கிறிஸ் லின் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் அழகாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச்சை பும்ரா தவறவிட்டதால் சிக்ஸர் ஆனது. இவ்வாறு புவனேஷ் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டுமே இரண்டு கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. 

எனினும் அந்த கேட்ச்களை தவறவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர்கள் இருவரையுமே கலீல் அகமது தனது அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார். 41 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதன்பிறகு அபாயகரமான அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை 19 ரன்களில் கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் குருணல் பாண்டியா. கடந்த போட்டியில் தனது பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்லை இந்த முறை அவுட்டாக்கி அனுப்பினார் குருணல். 

அதன்பிறகு அதிரடியாக ஆடிய குல்டர்நைல் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 101 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியின் ஆண்ட்ரூ டை, 18வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அந்த ஓவரில் மெக்டெர்மோட் ஒரு சிக்ஸரையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து 19வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், மழை வந்தது. 

ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து டக்வொர்த் முறைப்படி இந்திய அணிக்கு 19 ஓவரில் 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.