ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு தங்கம் வென்று அசத்தல்!
ராமநாதபுரத்தில் நடந்த முதல் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணி வெற்றி பெற்றது.
ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலு மாணிக்கம் ஆஸ்ட்ரோ டிராஃப் ஹாக்கி மைதானத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் ஹாக்கி இந்தியா நடத்தும் முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டி நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநில அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே கர்நாடகா அணி ஆதிக்கம் செலுத்தி முதல் கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2ஆவது கால்பகுதியில் பெனால்டி கார்னரில் தமிழக வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தனர். இதன் காரணமாக தமிழ்நாடு 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். இதையடுத்து, 4ஆவது கால்பகுதியில் கர்நாடகா ஒரு கோல் அடிக்க போட்டி 2-2 என்று சமநிலையானது. இதனால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளும் கோல் அடித்தனர்.
இறுதியில் தமிழ்நாடு 5-3 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதில், தமிழ்நாடு அணிகள் சார்பில் கோல்கீப்பரான நதியரசு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதே போன்று நடந்த மற்றொரு போட்டியில் கர்நாடகா - தமிழ்நாடு ஜூனியர் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கர்நாடகா அணி 3 கோல்கள் அடிக்க, தமிழ்நாடு அணி ஒரு கோல் மட்டுமே அடித்த நிலையில், கர்நாடகா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றியது. தமிழ்நாடு ஜூனியர் மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கமும், ஆந்திரா அணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியது.