Tamilnadu government promotes encouraging Tamil Nadu players to win international shootings

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். 

சென்னை போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், விளையாட்டு அறிவியல் மையம், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்கின் "கன் ஃபார் க்ளோரி' அகாதெமி ஆகியவற்றின் சார்பில் அதிநவீன துப்பாக்கி சுடுதல் பயிற்சி அகாதெமி தொடக்க விழா நேற்று நடைப்பெற்றது.

போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பங்கேற்று அகாதெமியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர், உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வளரிவனை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பாராட்டினார். 

அதன்பிறகு அவர் பேசியது, "1.5 இலட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன பயிற்சி மையம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். 

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக இந்த மையத்தோடு விளையாட்டுத் துறையும் இணைந்து செயல்படும்" என்று அவர் தெரிவித்தார். 

இந்த விழாவில் விளையாட்டு அறிவியல் மைய இயக்குநர் டாக்டர் எஸ்.ஆறுமுகம், "கன் ஃபார் க்ளோரி' அகாதெமியின் தலைவர் யூசப் பன்வேல்வாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.