பாராலிம்பிக்கில் ஜொலித்த தமிழக வீராங்கனைகள்; அடுத்தடுத்து 2 பதக்கங்களை வென்று அசத்தல்
பாராலிம்பிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கமும், அதே போட்டியில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தி உள்ளனர்.
பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இன்று இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், சீனாவின் கியூக்ஸியாவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் 21 - 17, 21 - 10 என்ற நேர் செட்களில் கியூக்ஸியா வெற்றி பெற்றார். முதல் இடத்திற்கான போட்டியில் தோல்வி அடைந்ததால் தமிழகத்தின் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தமிழகத்தின் மற்றொரு வீராங்கனையான மனிஷா ராமதாஸ் 21 - 12, 21 - 8 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
முன்னதாக இன்றைய தினம் ஆடவருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போன்று ஆடவருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் நிதேஷ் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
Paris Paralympics: பேட்மிண்டனில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்
இன்றைய தினம் 4 பதக்கங்கள் கிடைத்த நிலையில் இந்தியா மொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தமாக 11 பதக்கங்களுடன் 22வது இடத்தில் உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இன்றைய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.