Paris Paralympics: பேட்மிண்டனில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி தொடர்ந்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர் கொண்டார்.ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டி நடைபெற்றது.
டெஸ்ட் போட்டியில் இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து; தொடரை கைப்பற்றி அசத்தல்
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிதேஷ் குமார் முதல் செட்டை 21 - 14 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட டேனியல் பெத்தேல் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 - 21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை டேனியல் கைப்பற்றினார். இரு வீரர்களும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் இறுதி செட் விறுவிறுப்பின் உச்சத்திற்குச் சென்றது.
இரு வீரர்களும் இறுதி செட்டை கைப்பற்ற முனைப்பு காட்டிய நிலையில் நிதேஷ் குமார் 23 - 21 என்ற கண்க்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இதே போன்று வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். மொத்தமாக தற்போது வரை இந்திய வீரர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 9 பதக்கங்களுடன் 22வது இடத்தில் உள்ளது. சீனா 36 தங்கம், 28 வெள்ளி உட்பட 77 பதக்கங்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.