சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

 சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் கோல் கணக்கை இளம் வீரர் ஷிலானந்த் லக்ரா தொடங்க, இங்கிலாந்தின் கணக்கை மார்க் கிளெகோர்ன் தொடங்கினார்.

ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்திய வீரர் தல்விந்தர் சிங் இங்கிலாந்தின் தடுப்பாட்டத்தை கடந்து கோல் போஸ்ட்டுக்கு பந்தை விரட்டினார். ஆனால், இங்கிலாந்து கோல்கீப்பர் ஜார்ஜ் அதை அரண் போல் தடுத்தார்.

எனினும், அவர் தடுத்ததில் மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை இந்திய இளம் வீரர் ஷிலானந்த் லக்ரா மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்பி வைத்தார். இது, அவருடைய முதல் சர்வதேச கோலாகும்.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், டிராக் ஃப்ளிக்கர்களான வருண் குமார், அமித் ரோஹிதாஸ் அவற்றை கோலாக மாற்ற இயலாத அளவுக்கு இங்கிலாந்தின் தடுப்பாட்டம் பலப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீணடித்தது. அதேபோல் 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்தியா தவறவிட்டதால், ஆட்டம் கையைவிட்டுச் சென்றது. 53-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை மார்க் கிளெகோர்ன் அருமையான கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார். 

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.  இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவிடம் தோற்றிருந்த இந்தியா, 2-ஆவது ஆட்டத்தை டிரா செய்ததால் அந்த அணிக்கு முதல் புள்ளி கிடைத்துள்ளது. இதையடுத்து 6 அணிகளைக் கொண்ட தனது பிரிவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 3-வது ஆட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை உலகின் முதல்நிலை அணியான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.