ஸ்பெயினை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா; தொடர் கோல்களால் தெறிக்கவிட்ட மகளிரணி...
ஸ்பெயினுக்கு எதிரான 5-வது ஹாக்கி டெஸ்ட் போட்டியில் 4-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி இலண்டனில் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி ஸ்பெயினில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு ஆடி வருகிறது.
ஸ்பெயின் அணி இரண்டு ஆட்டங்களிலும், இந்திய அணி ஒன்றிலும் வெற்றிப் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் ஸ்பெயின் முன்னிலை பெற்று இருந்தது.
நேற்று முன்தினம் நடந்த மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதற்கிடையே தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது டெஸ்ட் ஆட்டம் நேற்று நடந்தது.
இதில், ராணி, குர்ஜித் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். ஸ்பெயின் சார்பில் லோலா ரியரா ஓரே கோலை அடித்தார்.
இந்திய அணியின் அற்புத ஆட்டத்தால் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2-2 என ஹாக்கி டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்தது.