ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் பிரண்டன் மெக்கல்லம், யுவராஜ் சிங் ஆகிய வீரர்கள் விலைபோகவில்லை. 

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. இதில் முதல் வீரராக ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலையுடன் ஏலம் விடப்பட்ட மனோஜ் திவாரியை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அதேபோல புஜாராவும் விலைபோகவில்லை. புஜாராவையும் 50 லட்சத்திற்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. 

அதேபோல நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான பிரண்டன் மெக்கல்லத்தை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முனையவில்லை. ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் முதல் போட்டியிலேயே 158 ரன்களை குவித்து மிரட்டியவர் பிரண்டன் மெக்கல்லம். அவர் ஐபிஎல்லில் என்னதான் அதிரடியாக ஆடியிருந்தாலும் தற்போதைய சூழலில் பெரியளவில் சோபிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிவிட்ட அவருக்கு வயதும் அதிகமாகிவிட்டது. ஆர்சிபி அணியில் கடந்த சீசனில் ஆடிய அவர், சரியாக ஆடாததால் தான் அந்த அணி அவரை கழட்டிவிட்டது. இந்நிலையில் அவரை ஏலத்தின் முதல் சுற்றில் எந்த அணியும் எடுக்கவில்லை. 

அதேபோலவே ஒரு காலத்தில் அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கை, இந்த சீசனில் அவரது அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. 

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் விலைபோகவில்லை.