ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி வலுவாக உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

இந்திய அணி சிறப்பாக ஆடினாலும் நிரந்தரமான மிடில் ஆர்டர் இன்னும் அமையவில்லை. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசையில் உறுதி செய்யப்பட்ட ராயுடு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடினார். ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் சோபிக்கவில்லை. அதேநேரத்தில் அருமையாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள தோனியை 4ம் வரிசையிலும் 5ம் வரிசையில் கேதர் ஜாதவையும் இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. 

இதற்கிடையே நியூசிலாந்து தொடரில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் இடம்பிடித்துள்ளார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி தொடங்க உள்ள நிலையில், அந்த போட்டியில் ஆடும் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஷுப்மன் கில். 

கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடந்த அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அந்த அணியில் இடம்பெற்று அருமையாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றவர் ஷுப்மன் கில். நியூசிலாந்து சூழலில் சிறப்பாக ஆடி அண்டர் 19 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றதால் அவரால் அந்த சூழலில் சிறப்பாக ஆடமுடியும் என்பதால் அவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கடைசி சோதனை முயற்சியாக அவரை நான்காம் வரிசையில் இறக்கிவிட வாய்ப்புள்ளது. ஷுப்மன் கில் இதுவரை தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நன்றாக பயன்படுத்திக்கொண்டு ஜொலித்தவர். அதேபோல நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதால், அதிலும் ஜொலிக்கிறாரா என்று பார்ப்போம்.