தியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டியில் 353 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டும் இந்தியா பி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக பேட்டிங் செய்து சதம் விளாசியுள்ளார். 

தியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டி இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. ரஹானே தலைமையிலான இந்தியா சி அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணியும் இறுதி போட்டியில் ஆடிவருகின்றன.

டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணியின் கேப்டன் ரஹானே மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 114 ரன்கள் குவித்தார். 

கடந்த போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில் இந்த முறை 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஒரு போட்டியில் கூட சரியாக ஆடாத ரெய்னா, இந்த போட்டியிலும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிவந்த ரஹானே சதம் கடந்தார். ரெய்னாவின் விக்கெட்டுக்கு பிறகு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், சிக்ஸர்களாக விளாசினார். 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார் சூர்யகுமார்.

கடைசிவரை ஆட்டமிழக்காத ரஹானே, 144 ரன்கள் குவித்தார். இதையடுத்து இந்தியா சி அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்களை குவித்தது. 

353 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரருடன் பி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த கெய்க்வாட், 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி சதம் விளாசினார். விக்கெட்டை பறிகொடுக்காமல் கவனமாக ஆடிவரும் ஷ்ரேயாஸ், அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடிவருகிறார். 353 ரன்கள் என்பது பெரிய இலக்கு; மேலும் ஷ்ரேயாஸுடன் கூட சேர்ந்து ஆட பெரிய பேட்ஸ்மேனும் இனி இல்லை. முக்கியமான பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிட்டனர். எனவே வெற்றியை நோக்கி ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடினால் பெரிய ஸ்கோரை அடிப்பதற்கான அருமையான வாய்ப்பு உள்ளது.