shardul thakur opinion about his batting in last minute

கடைசி நேரத்தில் தனது அதிரடியான பேட்டிங் குறித்த ரகசியத்தை சென்னை அணி வீரர் ஷர்துல் தாகூர் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

7வது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி, அதிகமுறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெறுகிறது. 

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதி சுற்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. முதலில் பேட்டின் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சாஹர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். அதன்பிறகு கோஸ்வாமி, வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹாசன், யூசுப் பதான் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, கடைசி ஓவர்களில் பிராத்வைட் மட்டும் அதிரடியாக ஆடி, ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 139 ஆக உயர்த்தினார்.

140 ரன்கள் என்ற எளிய ஸ்கோரை விரட்டிய சென்னை அணியும், ஹைதராபாத்திற்கு சற்றும் சளைக்காத வகையில், விக்கெட்டுகளை இழந்தது. வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, சாஹர், ஹர்பஜன் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் ஆடிய டுபிளெசிஸ் இலக்கை நோக்கி பயணித்தார். 18 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 117 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டு ஓவருக்கு 23 ரன்கள் தேவை. 

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சித்தார்த் கவுல் வீசிய 19வது ஓவரை தாகூர் எதிர்கொண்டார். டுபிளெசிஸை நம்பியிருந்த சென்னை அணி மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் தாகூர். 19வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் உட்பட அவர் மட்டுமே 15 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் மொத்தமாக 17 ரன்கள் எடுக்கப்பட்டது. அதனால் கடைசி ஓவரில் டுபிளெசிஸின் வேலை எளிதானது. ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என்ற நிலையில், முதல் பந்திலேயே டுபிளெசிஸ் சிக்ஸர் விளாசி அணியை வெற்றியடைய செய்தார்.

இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் டுபிளெசஸின் வேலையை எளிதாக்கிய தாகூருக்கும் முக்கிய பங்கு உண்டு. போட்டிக்கு பின்னர் பேசிய ஷர்துல் தாகூர், அந்த ஓவரில் நான் கொஞ்சமாவது அடித்து கொடுத்தால்தான் டுபிளெசிஸிற்கு இலக்கை விரட்டுவது எளிதாக இருக்கும். எனவே 19வது ஓவரில் நான் அடிப்பது முக்கியம். நான் பேட்டிங் ஆடுவேன் என பயிற்சியாளர்களிடம் அவ்வப்போது கூறுவேன். கடந்த ஆண்டு புனே அணிக்காக ஆடியபோது, இருமுறை பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இருமுறையும் அவுட்டாகிவிட்டேன். ஆனால் இந்த முறை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டேன். டுபிளெசிஸ் என்னை சிங்கிள் தான் எடுக்க சொன்னார். ஆனால் வேறு வழியில் அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ரசிகர்கள் பவுண்டரிகளைத்தான் விரும்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமையும். அந்த வகையில் கடைசி நேரத்தில் போட்டியை ரசித்திருப்பார்கள் என ஷர்துல் தாகூர் தெரிவித்தார்.