இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இவர்களின் தடைக்கு பிறகு டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறார். 

ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் அந்த அணி திணறிவருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, இம்முறை தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. 

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர் மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

மார்கஸ் ஹாரிஸ், ஃபின்ச், டிராவிஸ் ஹெட் என அனுபவமற்ற பேட்டிங் வரிசையை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, வலுவான இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது. பேட்ஸ்மேன்கள் திணறும் அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசுவதோடு பேட்டிங்கிலும் போராட்ட குணத்தை வெளிப்படுத்துகின்றனர். முதல் போட்டியில் நாதன் லயன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். 

இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டில் அபாரமாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பாட் கம்மின்ஸ், பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார். 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து, தனி ஒருவனாக களத்தில் நின்று போராடினார். நான்காம் நாளே முடிந்திருக்க வேண்டிய போட்டியை ஐந்தாம் நாள் வரை இழுத்து சென்றார். அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. போட்டி, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் என்று சொல்வதை விட, இந்தியாவுக்கும் கம்மின்ஸுக்கும் என்று சொல்லுமளவிற்கு அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கம்மின்ஸ்.

இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 138 ரன்களையும் குவித்துள்ளார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலம் குறித்தும் எதிர்கால கேப்டன் குறித்தும் மிகவும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வெளிப்படையாக ஒரு கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய அணி தேடிக்கொண்டிருந்த மாதிரியான ஒரு அருமையான ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ். இவர் தான் ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால கேப்டன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.