ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆடும் கடைசி தொடர் இது என்பதால், உலக கோப்பை அணியில் ஓரிரு இடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய வீரர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. எனவே ஓரிரு இடங்களுக்கு பரிசீலனையில் உள்ள வீரர்கள் இந்த தொடரில் சோதிக்கப்படுவார்கள்.

உலக கோப்பைக்கு முன் ஐபிஎல்லும் நடக்க உள்ளது. எனவே தொடர்ந்து ஆடிவரும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவை. கேப்டன் விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்படலாம். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை தேர்வு செய்வது குறித்து வரும் 15ம் தேதி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் கூடி விவாதிக்க உள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அதிகாரி ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் வகையிலான அணியை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே சுழற்சி முறையில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.