ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டார் சஞ்சு சாம்சன்.

பெங்களூரு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களாக ரஹானேவும் ஷார்ட்டும் களமிறங்கினர். ஷார்ட் மந்தமாக ஆட, ரஹானே அடித்து ஆடினார். 36 ரன்கள் எடுத்து ரஹானேவும் வெறும் 11 ரன்களில் ஷார்ட்டும் அவுட்டாகினர்.

சஞ்சு சாம்சனும் பென் ஸ்டோக்ஸும் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடினர். அடித்து ஆடிய சாம்சன், 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பிறகு உமேஷ் யாதவ், வோக்ஸ், கேஜ்ரோலியா ஆகியோரின் பந்துகளில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

36 பந்துகளில் அரைசதம் கடந்த  சாம்சன், 45 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். 10 சிக்ஸர்கள் விளாசினார். சாம்சனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் கோலி திகைத்து நின்றார். சாம்சனின் அதிரடியால் 217 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் 10 சிக்ஸர்களை விளாசிய சஞ்சு சாம்சன், ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2010ம் ஆண்டில் ராஜஸ்தானுக்கு எதிராக முரளி விஜய், 11 சிக்ஸர் அடித்ததே, ஒரு ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாக உள்ளது. அந்த சாதனையை சாம்சனால் நேற்று முறியடிக்க முடியாமல் போனது.

ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்:

1. முரளி விஜய் - 11 சிக்ஸர்கள் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 2010

2. சஞ்சு சாம்சன் - 10 சிக்ஸர்கள் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2018

3. யுவராஜ் சிங் - 9 சிக்ஸர்கள் vs டெல்லி டேர்டெவில்ஸ் - 2014

4. ரிஷப் பண்ட் - 9 சிக்ஸர்கள் vs குஜராத் லயன்ஸ் - 2017